பக்கம்:கனிச்சாறு 5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


135

அறிவுக் கூறுகள் பல நூறு!


அறிவுக் கூறுகள் பலநூறு! - இங்(கு)
அவற்றுள் நீ ஒரு சிறுகூறு!
செறிவித் துள்ளஉன் உணர்வறி - நீ
சிறப்பாய் வளர், உனை அவ்வாறு!

வாழ்க்கைப் பாதைகள் பலவேறு - நீ
வந்து நடப்பதோ ஓர்ஆறு!
வீழ்க்கும் தடைகள் நிலையறிந்து - நீ
விரைவாய் மேன்மேல் நடைதேறு!

உள்ளத் துணர்வுகள் பலகோடி - அவற்
றுண்மை காண்பாய் நீ, தேடி
வெள்ளத் தூறும் குமிழ்வாழ்க்கை! - நல்
விளைவுகள் செய்வாய் புகழ்சூடி!

பேச்சை வீணாய் இறையாதே! - வீண்
பெருமை பேசிக் கரையாதே!
மூச்சொவ் வொன்றும் பயன்தரல்போல் - நீ
முனை;விளை; நலன்வரும்; குறையாதே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/168&oldid=1444927" இலிருந்து மீள்விக்கப்பட்டது