பக்கம்:கனிச்சாறு 5.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  17


16  பறவை, விலங்குகளைப் பார்...!

சிட்டுக் குருவிபோல் சுறுசுறுப் பாயிரு!
பட்டாம் பூச்சிபோல் அழகாய்ப் புனைந்துகொள்!
குரங்குக் குட்டிபோல் குறும்புசெய் யாதே!
வேங்கைக் குருளைபோல் வீறுகொள், வாழ்வில்!
நாய்போல் பிறர்செய் நன்றி நினைந்திடு!
எலிபோல் பிறரின் ஈட்டம்உண் ணாதே!
காக்கை போலக் கலந்துண்ணக் கற்பாய்!
சிற்றெ றும்புபோல் சிறுகச் சேமி!
பூனைபோல் பதுங்கிப் பொருள்கவ ராதே!
ஆனைபோல் பெருமித மாக நடையிடு!
தேனீ போல நல்லன நாடு!
குயில்போல் பாடு!மயிலென ஆடு!
குயில்போல் பேசு! புறவுபோல் இனைந்திரு!
மீன்போல் நீந்து! கன்றுபோல் துள்ளு!
எருமை போலக் கலக்கிஉண் ணாதே!
காளை போலத் தோளை உயர்த்து!
கோழி போலக் குழந்தைகள் பேணு!
சேவலைப் போலச் செம்மாந்து நிற்பாய்!
பாம்பைப் போலப் பதுங்கி இராதே!
முழுநிலா போல முகத்தில் ஒளிசேர்!
கதிரவன் போலக் கண்ணொளி ஏற்று!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/51&oldid=1424843" இலிருந்து மீள்விக்கப்பட்டது