பக்கம்:கனிச்சாறு 5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


63  அண்ணன் பட்டம் விடுகின்றான்!

அண்ணன் பட்டம் விடுகின்றான்!
அழகுப் பட்டம் விடுகின்றான்!
வண்ணத் தாளில் செய்ததுவாம்!
வாலை யாட்டிப் பறப்பதுவாம்!

விண்ணின் மேலே பாய்வதுவாம்!
`விர் விர்' என்றே ஒலிப்பதுவாம்!
கண்ணில் கூசும் ஒளிப்புடனே
காற்றில் மிதந்து திரிவதுவாம்!

நூலைச் சுண்டி இழுக்கின்றான்!
நொடித்து நொடித்து வலிக்கின்றான்!
வாலைச் சுழற்றித் தலையாட்டி
வண்ணப் பட்டம் பறந்திடுமாம்!

இங்கும் அங்கும் ஓடுகிறான்!
இணைக்கும் நூலை விடுகின்றான்!
தங்கும், இறங்கும், தலையாட்டும்,
தரையில் பாயும் மேலேறும்!

முன்னும் பின்னும் நகர்கின்றான்!
முகத்தில் மகிழ்ச்சி கொள்கின்றான்!
என்னின் வேலை நூலையெல்லாம்
எடுத்தே சுற்றிக் கொடுப்பதுதான்!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/90&oldid=1424833" இலிருந்து மீள்விக்கப்பட்டது