பக்கம்:கனிச்சாறு 6.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


ஆலினுள் விழுது காற்றுக்
காடுதல் போலக் கொட்டும்
பால்புனல் தொலைவி னின்று
பார்ப்பதற் காடும்! நீண்ட
வாலுள குரங்கு தாவி
ஓடிடும்; நீரில் ஒற்றைக்
காலினில் நின்று நாரை
குதித் தெழும் மீனைக் கவ்வும்! 7

வானின்று சரிந்து வீழும்
மின்னல்போ லருவி! அந்தத்
தூநிறத் தருவி போடும்
பேரொலி இடிபோற் கேட்கும்!
மானிறப் பாறை தன்மேல்
‘மரகதப்’ பூச்சு அதன்மேல்
பூநிறங் கண்டு கண்டு
பூரிக்கும் இயற்கை யுள்ளம்! 8

தாமரைப் பரிதி தங்கத்
தழல்நிற ‘மகரந்’தத்தை,
நாமெல்லாம் நுகரத் தூவி
நடந்தது! மஞ்சள்! பூச்சு,
தேமலர்ச் சோலை மீதும்,
தெள்ளிய அருவி மீதும்,
மாமலை மீதும், பட்டு
மறைந்து, பின் இருளால் மாயும்! 9

இரவுக்கு வரவு கூறி
எழுந்தனள் நிலவு மங்கை!
வரவுக்கு நன்றி கூறி
வாழ்த்திடும் அருவி! ஈண்டவ்
வருவியோ நீண்ட வால்மீன்!
அழகிய காட்சி! கண்டு,
பருகினேன்! பன்னாள் சென்றும்
பூரிக்கும் எனது நெஞ்சம்!

-1950
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/108&oldid=1445206" இலிருந்து மீள்விக்கப்பட்டது