பக்கம்:கனிச்சாறு 6.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


60

கனவு கலைந்தது!


இதுவரை நுகரா தின்மலர்க் காடு!
மதுக்கென இசைக்கும் மைநிற வண்டினம்!
புதுப்புனல் ஊற்றப் பொய்கையோர் மருங்கில்
பொதுமன் றொன்றோர் புறத்திருந் ததன்மேல்
அமர்ந்திருந் தேனென் அருகிலோர் மலர்க்கொடி
சுமந்த பூக்களாற் அருட்கை தாழ்த்தி
அடிக்கும் தென்றலுக் கப்படி யிப்படித்
துடிக்கும் போலென் உளத்தைத் தொட்டது!

கிள்ளும் பசியில் கிளர்ந்த கனவிது!
உள்ளும் புறமும் ஒருநொடிப் பொழுதில்
வெள்ளக் குளிர்மையும் வரிமலர் மணமும்
அள்ளிய மகிழ்வில் அசைவிற் றிருக்கும்
என்னிடம் வருதற் கெடுத்தடி வைப்பதார்?
அன்னம் போலடி வைத்தெனை அணுகுதல்
பேரிடி யாகப் பட்டதென் காதில்!
யாரவர்? கனவிற் குஇடர்தரு வார்யார்?
நுனிப்புல் போலெலாம் காலையிற் படிந்த
பனித்துளி சிதையா தடிவைத் தென்பால்
யாரது? வருவது? யாழ்நரம் பசைக்கும்
தென்றல் எழுப்புந் தெள்ளிய ஓசையும்
குன்றசைந் ததுபோற் காதிற் பட்டது!
நனைவெனும் உடுக்கை நெகிழ்ந்ததும் என்னைக்
கனவெனும் காற்று கையால் அணைத்தது!

சுற்றிலும் பச்சை சூழ்ந்துள புல்வெளி!
எற்றிசை நோக்கினும் எழில்வான் வெளியே!
வெள்ளிய முகில்மேல் வீரன் போலவே
அமர்ந்திருக் கின்றதை அறிகின் றேன்நான்!
யாரோ என்னைக் கடப்பதை உணர்கிறேன்!
யாரவர்? இன்கன வழிப்பார் யாரவர்?
மேலும் கனவில் மிதந்ததென் னுள்ளம்!
பாலொளி நிலவில் பாடுகின் றேன்யான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/114&oldid=1445369" இலிருந்து மீள்விக்கப்பட்டது