பக்கம்:கனிச்சாறு 6.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


காப்பதுபோற் காட்டிப்பின் கங்கையோ பல்லுயிரை
மாய்ப்பதுபோ லல்லாமல் மக்களினம் - பூப்பதிலுன்
வெள்ளப் பெருக்கை விரிக்கின்றாய்; உன்பெருமை
உள்ளப் பெருக்கிற்கோர் ஊற்று. 8

ஊர்வளமை காட்டும் உயர் மதுரை; நாகரிகச்
சீர்வளமை காட்டும் செறிநூல்கள் - நேரில்லாப்
போர்வலிமை காட்டும் பொருதோள்கள்; இந்நாட்டின்
நீர்வளமை காட்டுவைநீ நின்று. 9

வான்வறக்கு மென்றாலும் வண்மையிலே மேன்மேலுந்
தான்சுரக்குந் தண்டமிழ்த்தாய்க்
                                        காவிரியே - தேன்சுரக்கும்
செந்தமிழின் நன்னாட்டுச் சீரே; செழிக்கவைக்க
வந்தமர்ந்த வேலையே வாழ்த்து. 10

1956




63

உள்ளக் கூத்து!




மெல்லியந் தென்றல்வந் தோட்டுகின்ற மென்முகிலின்
மேலேறிக் குந்தி, நீலம்
மேவுகிற வானத்து வெளியெல்லாம் சுற்றியும்
மேலைக் கடல் குளித்தும்,
துல்லியம் பூவிதழ்க் ளுட்புறத் தூறுகின்ற
தேனினைச் சுவைக்க வெண்ணித்
தும்பிக்குத் தம்பியாய் ஓலைச் சிறகாட்டித்
தொலைவெலாஞ் சென்று மகிழ்ந்தும்,
கொல்லியஞ் சாரலில் பலவின் கனியருந்திக்
குற்றால நிர ருந்தி
குமரி மணலி லுளம் மகிழமகிழ உடல்
குப்புற வீழ்ந்து புரண்டும்,
அல்லியங் காதல னாமழகு முழுநிலவை
அண்டி, பல பாடல் பெற்றும்,
அன்றன்றை என்னுள்ளம் ஆட்டி நடத்துவிக்கும்
அருங் கூத்தை என்ன சொல்வேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/118&oldid=1445375" இலிருந்து மீள்விக்கப்பட்டது