பக்கம்:கனிச்சாறு 6.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


துன்னூசி நுனித்தனையும் ஓரறமுந் தோற்றுகிலீர்!
தின்னூசிப் போம்பொருட்குத் திசையெட்டுந்
                                                      தோய்ந்தலைவீர்!
மன்னுமுளப் பெருஞ்சிறப்பை மறந்தீரே, மண்ணகத்தீர்!
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!

பொன்னணியும் முத்தணியும் பூந்துகிலும் பூண்டுபல
மின்னிடையார் மருங்கணைந்து மிசைவதுவே இன்பமெனப்
பன்னியுரை சாற்றிடுவீர்! பழிவினைக்கிங் குயிர்செருப்பீர்,
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!

நன்னருடல் பேணுகிலீர் நலிந்துழன்று நாறுகின்றீர்!
என்னவகை வாழ்ந்திடுவ தென்பதையு மெண்ணுகிலீர்!
மின்னொளிபோல் தோன்றுகிறீர்; மாளுகிறீர்; நீணிலத்தீர்!
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!

பின்விளைவை எண்ணுகிலாப் பேதையரா யீங்கிருந்து
பன்விளைவுக் காளாகிப் பதைபதைத்துச் சிதைந்தொழிவீர்;
முன்பிழையே பின்துயரை மூட்டுவிக்கு மென்றறியீர்!
என்கொலும தறியாமை, இதுவாழ்வென் றியம்புவதே!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/142&oldid=1445409" இலிருந்து மீள்விக்கப்பட்டது