பக்கம்:கனிச்சாறு 6.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  117


78

இறைவணக்கப் பாட்டு!


(ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களிலும், விழாக்களிலும் பொதுவுணர் வெழுப்பவேண்டிய பள்ளிகளிலும் தொடக்கத்தே பாடப்பெறும் இறைவணக்கப் பாட்டு பொதுவானதாக இல்லை என்ற குறை என்னிடம் கூறப்பெற்றதுண்டு, எனவே மாந்த இனத்திற்கே பொதுவானதும், மெய்யுணர்வு ஒன்றே கொளுவப் பெற்றதுமான இப் பாட்டை எழுதினேன். பொதுவினார் பயன்படுத்திக்கொள்க.)

விரிவிசும்பைச் செங்கதிரை விண்மீனை நிலவை
வெப்பவொளி மண்டிலத்தை விளங்கருபாழ் வெளியை,
எரிவளியைத் தீம்புனலை இருநிலத்தை, நிலமேல்
ஏந்துகின்ற நுண்ணுயிரை இயங்குநிலைத் திணையை,
திரிதருமென் புள்ளினத்தைத் திறல்விலங்கை நீரில்
தேங்குறுமீன் கூட்டத்தைத் தெருள்மாந்த வினத்தைப்
புரிமனத்தைப் பெருநினைவைப்
பொருள்செறிந்த தமிழைப்
புலப்படுத்துந் திறலெதுவோ புலனுறவாழ்த் துவமே!

தமிழாருஞ் செம்பொருளைத் தவிர்தலிலா முதலைத்
தாயாருக்குந் தாயாகித் தனித்திருக்கும் மெய்யைக்
குமிழாரும் உயிர்ப்புனலைக் கூட்டுவிக்கும் நெறியைக்
கோதில்லா நல்லுணர்விற் குமிழ்த்தெழுமெய்க் கூத்தைச்
சிமிழாரும் இமைவிழிக்குள் சிறுபாவைக் குள்ளே
சிதறொளியைக் குவிக்குமொரு செயலறுத்த செயலை
அமிழாதெம் நன்னெஞ்சம் அங்காந்த தாகி
அறிவறியத் துடிப்பதெதோ அதுதனைவாழ்த் துவமே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/143&oldid=1445411" இலிருந்து மீள்விக்கப்பட்டது