பக்கம்:கனிச்சாறு 6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119


உள்ளமெனும் வழிகாட்டி தனைநோக்கிக் கேட்டேன்;
ஒருநூறு முறைகேட்டேன்; விடைகேட்க நின்றேன்;
வெள்ளமெனும் பேருணர்வில் எனைவீழ்த்தி வாழ்வை
வீணடிக்கும் வல்லவனைச் சலிப்புமிகக் கேட்டேன்,
பள்ளமிது மேடிதென்று பகுத்துணரார் பாங்கில்
பாக்கள்பல வித்திவிட்ட சோர்வதனால் கேட்டேன்
கொள்ளையுணர் வெழுந்ததுபோல், கொழுந்துவிட்ட தீப்போல்
கூர்த்தெழுந்தே ஆர்த்ததுள்ளம்! இடிமுழக்கம் கேட்பீர்:

“மூளுகின்ற பேரறிவில் பிள்ளையடா நீதான்;
முங்கிவரும் வல்லுணர்வில் சிறுதுகள்நீ; புடவி
நீளுகின்ற ஊழியிலே சிறுபொழுதுன் ஆட்சி!
நினைவென்னும் விரிவானத் தொருசிறுகூ றாம், நீ!
ஆளுகின்ற நிறைத்திருவின் இறைப்பெரும்பே ராற்றல்
ஆட்டிவைக்கும் மேடையில்நீ ஆடுகின்ற சிறுவன்;
மாளுகின்ற வாழ்க்கையிலே மனம்வைத்துக் கேட்டாய்!
மட்கிவிடும் நீயெனது மாண்பினை ஐ யுற்றாய்!

வித்தழிந்து செடியாகும்; செடியழிந்து மரமாம்;
விரிந்தலரும் பூவழிந்து காயழிந்து கனியாம்;
ஒத்தழிந்த கனிகளுக்குள் ஒருகோடித் தோற்றம்;
உருவழியும் நிலையினுக்கேன் உளமழிய நொந்தாய்!
பித்தழிந்த பின்னையன்றோ மெய்ப்பொருளுங் காண்பாய்!
பேச்சழிந்து போனதற்கா மூச்சழித்துக் கொண்டாய்!
செத்தழிந்து போவதெது? சிறப்பதெதென் றந்தச்
சீரறிந்து கொண்டவன்போல் நீபிதற்று கின்றாய்!

கோடிபுலம்; கோடிநிலம்; விளைவுபல கோடி;
கூர்தலெவை; ஆர்தலெவை; தீர்தலெவை என்று
தேடிநலங் கண்டதுபோல் தீர்ந்தவுரை செய்வாய்!
திகைப்படைவாய்; உலகியற்குத் தேய்ந்திடிந்து போனாய்;
நாடிநிலங் கண்டவிடத் துழுதுவிதை யூன்றல்
நானுனக்குத் தந்தவினை; விளைவுபயன் முற்றும்
கூடிநலங் கூட்டுவதும் குறைப்பதுவும் நீயோ?
குறைமதிக்குங் கீழ்மதியால் குழம்புவதும் ஏனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/145&oldid=1445413" இலிருந்து மீள்விக்கப்பட்டது