பக்கம்:கனிச்சாறு 6.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15


“காதலென் றாலென்ன?" வென்றாள்; “- உன்
கன்னத்தை நீட்டு; நான் காட்டுவேன்” என்றேன்,
தோதறி யாதவள் வந்து - கனிச்
சுவைதருங் கன்னத்தைக் காட்டிநின் றாளே!
மாதுளை முத்துச் சிவப்பில் - என்
மாயிதழ் தோய்த்திட தோளை அணைத்தேன்!
“யாதுசெய் தாய்?” எனக் கூறி - என்
அத்தை வந்தாள்; உளம் செத்துநின் றேனே! 5

நாலைந்து நாட்கள் சென் றோட - ஒரு
நாளில் அவள் வீட்டு வாயிலிற் சென்றேன்!
நூலிடை வாடிட ஓடி - ஒரு
நொடிதங்கி, மீண்டும் வெளிவந்து நின்று,
பாலாடை போலொரு தாளை - தன்
பக்கலில் வீசினாள்; ஓடி எடுத்தேன்;
சேல்விழி கூறாத சொல்லை - அவள்
சின்ன விரல்களோ தீட்டின கண்டீர்! 6

“கன்னத்தில் ஊன்றிய வித்து - பெருங்
காதல் மரமாகி நிற்கின்ற தத்தான்!
மின்னலைப்போல் அது மின்ன - என்
மேனி குலுங்கிக் குலையுதே அத்தான்!
கன்னல் கசக்குதென் கண்கள் - எக்
காட்சியும் காண மறுத்தன அத்தான்!
இன்னுந் தயங்குவ தேனோ - வந்து
என்னை மணப்பீர்; அணைப்பீர்! - உம் ஏழை!” 7

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/42&oldid=1445090" இலிருந்து மீள்விக்கப்பட்டது