பக்கம்:கனிச்சாறு 6.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  17


17

ஒப்புமோ?


கோவை இதழ்க்குன்றன் அலகொப்புமோ? - அவள்
கொண்டைக் கொப்போ கிளியே? - எனைத்
தாவித் தொத்தும் இரு கைகளுக்கே - உன்றன்
தண்டின்கால் இரண் டொப்புமோ?
ஆவல் சுருட்டும் அன் னாள்மொழிக்கே - உன்றன்
அழகுவாய் மொழி ஒப்புமோ? - பெருங்
காவல் புரிந்தென்னைக் காப்பது போல் - உன்றன்
கணவனைக் காப்பையோ, நீ?

நீல விழிக்குன்றன் விழியொப்புமோ? - அவள்
நெளிகுழற் கொப்புமோ வால்? - உறுங்
கோலத் துகில்பெறும் மேனிக்கிணை - உன்றன்
ஓலைச் சிறகொப்பு மோ?
ஆல விழுதிலுன் உடலாடுங் காட்சி - என்
ஆயிழை நெளிவிற் கொப்போ? - என்றன்
பாலவள் கொஞ்சுதல் போல நீயும் - காதற்
பண்ணுவையோ கிளியே?

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/43&oldid=1445091" இலிருந்து மீள்விக்கப்பட்டது