பக்கம்:கனிச்சாறு 6.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  19


11

ஊடலுவகை!


வானத்து முகிலில் வாழ்கின்ற நீர்த்துளிக்கு
வழிநோக்குஞ் சிப்பியைக் கண்டிருந்தும்,
மீனத்து விழிமூடும் வகையென்னடி? - அது
மேயும் முகத்தின்ஒளி நகையெங்கடி?

தங்கக் கதிர்கையால் அணைக்கும் பரிதிக்குத்
தாமரைப் பெண்ணேங்கக் கண்டிருந்தும்,
செங்கை எனைவிலக்கும் வகையென்னடி? - உயிர்
சேரத் தழுவுமதன் திறமெங்கடி?

கொவ்வை யிதழ்மாந்தும் ஆசைப் பெருவண்டைக்
கூடும் மென்மலரைக் கண்டிக்கும்,
கவ்வும் அமைதிக்கு விரிவென்னடி - என்னைக்
காணும் விழிகவிந்த வகையென்னடி?

பாலை நிகர்த்தஒளி நிலவு வரும்வழியைப்
பார்க்கும் அல்லியினைக் கண்டிருந்தும்,
சேலைதழுவும் இடைக் கொடியெங்கடி? - பெருந்
தொல்லை விளைக்குமதன் நொடி யெங்கடி?

காவின் மலர்கொம்பிற் கிள்ளைக் குடும்பங்கள்
காதல் செய்யும்வகையைக் கண்டிருந்தும்,
பூவின் இதழ்குவிந்த வகையென்னடி? - அதன்
புறத்து விளையு மொளி நகையெங்கடி?

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/45&oldid=1445094" இலிருந்து மீள்விக்கப்பட்டது