பக்கம்:கனிச்சாறு 6.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  25


15

‘ஈ’க் காதல்!

“மாட்டுத் தொழுவத்திலே,காண
மாட்டாமல் இங்கோடி வந்தேனடி! - குப்பை
மேட்டினில் வந்தமர்ந்தே - உன்
மேனி குலுங்கி,நீ ஏனழுதாய்” - எனக்
கேட்டபடி, ஆண் ஈ - தன்
காதற் கிழத்தியின் அண்டை அமர்ந்தது!
“சேட்டுக் கடை இனிப்பைத் - தின்ன நீ
கூட்டிச் செல்ல வில்லை!....” என்றது பெண்; ஆணோ, 1

“போயிதற்காக நீயேன் - கண்ணீர்ப்
பொழிகின்றாய்? புறப்படிப் போதே செல் வோ”மென,
வாயிலிருந்து சொற்கள் - வெளி
வருமுன்னர்க் கண்ணீரைத் துடைத்ததப் பெண்ஈயும்;
தூயவுளக் காதல் கொண்டார்
தொலைவென எண்ணிட மாட்டாரிப் பாரையும்!
ஆயநிலை கொண்டதால் அவ்
ஆண் ‘ஈ’யும், பெண் ‘ஈ’யும் அங்குப் பறந்தன! 2

சிட்டுச் சிறகடித்து - அந்தச்
சின்னக் குமரியாம் ‘ஈ’ தன்னோ டாண்,‘ஈ’யும்
தட்டுக் கடையடைந்து பல
காரங்களும் சீனிப் பண்டங்களும் கண்டு
கட்டித் தழுவினவே, உள்ளக்
காதலினால் இன்ப மோதலினால் - நிலை
தட்டுத் தடுமாறி - உள்ளே
சென்றன; பண்டங்கள் தின்று முடித்தன!

உள்ள நிறைவோடே - தின்று
ஓய்ந்தன; பின்னர் பறந்தன தம்இடம்!
பள்ளங்கள் தாண்டிப், பெரும்பாதை
பக்கம் வர, குப்பை மேடொன்றைக் கண்டதும்,
‘நில்லுங்கள்’ என்றது பெண்! - ஆண்
நின்றது; பின்னே இரண்டும் தழுவின!
நல்லின்ப வேளையிலே - ஒரு
நங்கை வந்து குப்பைக் கொட்டிட மாண்டன,
உள்ள நிறை வோடே! 4

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/51&oldid=1445100" இலிருந்து மீள்விக்கப்பட்டது