பக்கம்:கனிச்சாறு 6.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33


அன்றொருநாட் செல்லுகையில்
கதவருகில் நின்றாள்;
அம்புவிழி தம்மைக்கொண்டே
என்னுயிரைக் கொன்றாள்,
குன்றுமலர் மல்லிகையின் குழலைக்
கண்டு நொந்தேன்;
குமிழ்ச்சிரிப்பை விளைக்குமிதழ்,
சுவைக்குந்தொறும் செந்தேன்.
நின்றபடி சிரித்தபடி
சின்னஇடையை நொடித்தாள்;
நொடித்த எழில்தன்னை விட்டே
என்னுயிரைக் குடித்தாள்,
பொன்றுலங்கும் மேனிதன்னைக்
கீழாய்க் கொஞ்சம் வளைத்தாள்;
போர்த்திருக்கும் எண்ணங்களை
உளத்தினின்று கலைத்தாள்.

என்னைப் பார்த்த வாறவளின்
கழுத்தைச் சிறிது நெறித்தாள்;
எட்டிநின்ற எனது நெஞ்சை
ஓடிவந்து முறித்தாள்,
மின்னல் வந்து தாக்கல் போல,
கண்கள் வந்து தாக்கும்;
மேலுமவள் எண்ணம் வந்து
விண்ணுக் கெனைத் தூக்கும்;
பின்னலினைத் தொட்டு விட்டேன்;
பேதை எனைப் பார்த்தாள்;
பார்வையாலென் உயிரைத் தூக்கிப்
பேரின்பத்தில் சேர்த்தாள்,
தின்னுமட்டும் இன்பத்தினை ஊட்டி
ஊட்டிக் களித்தாள்;
திசையறியா தின்பவெள்ளத் தவளும்
வந்து குளித்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/59&oldid=1445112" இலிருந்து மீள்விக்கப்பட்டது