பக்கம்:கனிச்சாறு 6.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


29

அவளும் பெண்!


மானுக்கு நிறமும் மயிலினுக் கியலும்
மழையினுக் கவிழ் கருங் குழலும்,
தேனுக்கு மொழியும், திங்கட்கு முகமும்,
திரிகுழல் புரண்டிடும் நெற்றிக்
கூனுக்குப் பிறையும், குரலுக்குக் குயிலும்,
கோவையின் நிறத்தினுக் கிதழும்
மீனுக்கு விழியும், ஒப்புவ தொன்றில்லா
மேனியவ் வேழையின் மேனி !

மேலுக்குத் துணியும், மின்னுபொன் மணியும்
மிகுதியாய்ப் பேசிடுந் துணிவும்,
காலுக்குச் செருப்பும், கைக்கொரு வளையும்
கடு வெயில் மழைக்கொரு குடையும்,
பாலுக்கு நினைவும், படுத்திடப் பாயும்,
பசியினுக் கொருவாய் உணவும்
ஆலுக்கு விழுதாய்த் துணையு மொன்றில்லா
அலை வாழ்(வு) அன்னவள் வாழ்வே !

பூத்திற மன்னவள் மேனியில் இல்லை;
புண்வடு போர்த்திய தெங்கும் !
நாத்திற மன்னவள் மொழியினி லில்லை !
நலிவவள் மொழி, செயலெல்லாம் !
‘கோத்திர’ மில்லை குலமெதுமில்லை !
கூன்பிறப் பாளர்கள் கூறும்
‘சாத்திர’ப் படிக்கு மிகத்தாழ்ந் துள்ள
சாதி,யவ் வேழையின் சாதி!

என்னினும் அவளும் இயங்கிடு முயிரே !
எவருக்கும் போலும்உண் டுணர்வே !
பொன்னினும் தூய மேனியார்ப் போலும்
பூரித்து வளர்ந்ததே பருவம் !
மன்னிய திளமை ! மானமும் பெற்றாள்;
மற்றவர் போலவள் பெண்ணே!
கன்னியள் அவளும் உலகத்தின் ஒருதாய்
கயவர்கள் முன்அவள் மண்ணே !

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/68&oldid=1445130" இலிருந்து மீள்விக்கப்பட்டது