பக்கம்:கனிச்சாறு 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


35

மணநாள்


அன்புள்ள அத்தான்! அன்றைய மடலில்
இன்பத் திருமணம் என்றைக் கென்றே
எழுதி யிருந்தீர்! எந்தமிழ் நாட்டில்
புழுதி மிகுந்த புன்மொழி இந்தி
வந்து நுழையவும்,வடவரும் பிறரும்
செந்தமிழ் நாட்டார் சீர்கே டுறவே
வேண்டிய வெல்லாம் விரைவாய்ச் செய்தே
ஈண்டிய வளனை எடுத்துப் போகவும்,
முற்படும் பொழுதில், முயற்சியும் இன்றிக்
கற்படு சிலையெனக் குந்தி யிருந்தால்
பத்தாண் டின்பின் பழம்பா யும்நம்
சொத்தென் றாமோ? சொல்லுதற் கில்லை!
தமிழர் நாட்டைத் தமிழர்க் காக்கிட
இமையா வீரர் இன்றே தேவை!
உலக உருண்டையின் ஒவ்வொரு முடுக்கிலும்
நிலவும் விடுதலை இங்கும் நிலவிட,
நாம்முய லாமல் ‘நமக்கென்ன’ வென்றால்
தீமைத் தீயெத் திசையிலும் பற்றும்!
அன்னை நாட்டின் அழகு விடுதலை
முன்னை வேண்டுக! மூச்சிருந் தாலிப்
பெண்ணை வந்து பிறகு தீண்டுக!
மண்ணில் மணநாள் விடுதலை நாளே?

-1956
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/74&oldid=1445139" இலிருந்து மீள்விக்கப்பட்டது