பக்கம்:கனிச்சாறு 6.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49


36

காதலிக்கு!


பீடுறு மயிலே! பிரிந்தனன் எனநீ
பிணிபடத் துடித்தெனை எங்கும்
தேடுவ தறிந்தேன்! தேம்புவ தறிந்தேன்!
தேய்வுறும் நிலவா யுடலம்
வாடுவ தறிந்தேன்! வாள்விழி! இனிநீ
வாடுவ தொழித்திடு; தமிழ்வாழ்
நாடணி செய்யும் நற்படை தன்னில்
நான்புகுந் திறப்பினும் இறப்பேன்!

தீங்கிலாவுளத்தோய்! துறந்தனன் எனநீ
துஞ்சலும் உணவதும் துறந்தே
ஏங்குவ தறிந்தேன்; இளைப்பதை யறிந்தேன்!
எழிலுடல் குலைவது மறிந்தேன்!
பூங்கொடி வருந்தேல்! பொன்னா டுய்யப்
போர்ப்படை சேர்ந்தனன்! இனிநான்
“மாங்குயில் கூவுஞ் சோலையில்” வாழ்ந்தே
மாளுவ தாகினும் மாள்வேன்!

கரும்பெனும் மொழியால், கருவிழி அசைப்பால்
கார்குழல் நெளிவால் இன்பம்
தரும்பெண் பாவாய்! நான்பிரிந் துன்னைத்
தனிவிட் டேனென எனையே,
வரும்படி கூறிக் கண்ணீர் வார்ப்பதை
வார்குழல் அறிவேன்! எனினும்
இரும்படி என்தோள்! என்தமிழ் நாட்டுக்
கிறப்பினும் இறப்பேன் ஈந்தே!

நீதரும் இன்பம் நிலையெனின் அன்பே
விலையிலை தமிழ்நாட் டின்பம்!
மீதுறும் துயரால் வருந்துவ தொருத்தி;
மீட்பால் மகிழ்வது நாடு!
தீதுறும் மணித்தமிழ் நாட்டினை மீட்கத்
துனிபடை சேர்ந்தனன்; வருந்தேல்!
மாதர சென்தோள் மாளினும் மாளும்!
மறுபடை கூட்டுக நீயே!

-1956
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/75&oldid=1445140" இலிருந்து மீள்விக்கப்பட்டது