பக்கம்:கனிச்சாறு 6.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57


என்றாலும் பாவி இருகண்ணால் நின்னுருவில்
ஒன்றி எழில் காட்டும் ஒளியழகைக் காணவில்லை!
கண்ணிமையா நோக்கிக் கருத்துணர்த்தும் நின் விழிகள்
என்ன உணர்த்தவென்று யானறியக் கூடவில்லை!

நெற்றிப் பிறைத்துண்டும், நீல மலர்க்கையும்
ஒற்றி மகிழ்கையிலே உள்ளே கனற் காய்ச்சல்
வாட்டிக் கருக்க நீ, வாடித் தளர்ந்திருந்தாய்! 40
நீட்டிப் படுக்கவைத்து நின்னுடலை யான்தொட்டுக்
காய்ச்சி முறுக்கும் கனல்குளிர நல்மருந்தைப்
பாய்ச்சி ஒளிவாயின் பல்லழகைக் காணவில்லை!

முத்தே! அழகே! முழங்கும் கவின் சுடரின்
வித்தே! விளக்கே! வியப்பில்லை! கேட்டுக்கொள்:
உன்னையான் கண்ட ஒருநாளில் நானென்ன
எண்ணிக் குழைந்தேனோ இன்றளவும் செத்தேனோ?
நூலெடுக்குங் காலும் நெடும்பாடல் தீட்டுதற்குக்
கோலெடுக்குங் காலுமெந்தக் கோலமயில் ஆடிற்றோ,
அந்த மயிலை, அழகுத் திருக்குயிலைச்
சொந்தமாக் கிக்கொண்டேன்;
சுற்றி வளைத்துவிட்டேன்! 50

யான்பெற்ற பேற்றை எண்ணி மகிழ்கின்றேன்,
கூன்பெற்ற வல்குருடன் கூன்நிமிர்ந்து கண்பெற்றுக்
கூத்தாடு மாறாய்க் குளிர்நிலவே ஆடுகின்றேன்,
சாக்காடும் என்றன் உளத்தைக் குளிர்விக்கும்,
ஆவி யிழந்தாலும் அன்பே அருகிருந்தால்
மேவி மனமகிழ்வேன்! பாடி மிதந்திருப்பேன்!
என்னை மறவாதே! ஏந்திழையே யான் மறவேன்!
உன்னை மறந்தோ உயிர்வாழ்வேன்! அன்றன்று!
முன்னடைந்த காதல் முழுக்காத என்றெண்ணி
முன்னி உவந்திருந்தேன்; மொய்ம்மலரே! உன்றன்பால்
ஆவி சுழன்றதுபோல் அன்றிருக்கக் காணவில்லை,
மேவி ஒளிச்சுடராய் மின்னி வருந்தவில்லை,
காந்துகின்றாய் என்னைக் கவின்நிலவே! என்னுளத்தில்
நீந்துகின்றாய் நீந்துகின்றாய் நீ!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/83&oldid=1445162" இலிருந்து மீள்விக்கப்பட்டது