பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

பூக்களால் ஆன நாற்கோணச் சதுரமாகிய விதானம்; சாமரை - வெண் சாமரங்கள்; உக்கம் - ஆலவட்டங்கள், ஆதியாய் வரிசையின் அமைந்த - இவை முதலாக அரசர்க்கு உரிய வரிசைகளில் அமைந்திருந்தவைகளையும்; உன்னரும் பொன்னின் - நினைத்தற்கு அரிய சிறப்புடைய பொன்னாலும்; மணியினால் - இரத்தினங்களாலும்; புனைந்த - அழகுற அமைக்கப்பட்ட; உழைகுலம் - மான்களையும்; தாங்கி - ஏந்தியவர்களாய்; நல்நிற காரின் வரவு கண்டு உவக்கும் - நல்ல கருமேகத்தின் வருகை கண்டு மகிழும்; நாடக மயில் என - நடனமிடும் மயிலே போல்; நடப்ப - இராவணனோடு நடந்து செல்ல.

***


அந்தியன் அனங்கன் அழல் படத் துரந்த
        வயின்முகப் பகழி வாயறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்தென்ன
        வெண்மதிப் பசுங்கதிர் விரவ
மந்த மாருதம் போய் மலர்தொறும் வாரி
        வயங்கு நீர் மாரியின் வருதேன்
சிந்து நுண்துளியின் சீகரத்திவலை
        உருக்கிய செம்பு எனத்தெறிப்ப

காமன் தனது கணைகளை ஏவுகிறான். யார் மீது? இராவணன் மீது. அது அவனைச் சுடுகிறது. அவ்வாறு சுட்டதினால் வெந்த புண்ணிலே வேல் கொண்டு பாய்ச்சினால் எப்படியிருக்கும்? அப்படித் துடித்தனாம் இராவணன். வேல் பாய்ச்சியவர் யார்? வானத்திலே தோன்றிய முழு நிலவு. இது போதாது என்று மந்தமாருதம் வீசுகிறதாம். சும்மா வீசுகிறதா? இல்லை. மலர்தொறும் மலர்தொறும் தவழ்ந்து தவழ்ந்து மணம் சுமந்து நீர்த்துளி சுமந்து இராவணன் மேல் தெறிக்கிறதாம். அஃது எப்படியிருக்கிறது? செம்பை காய்ச்சி உருக்கி தெளிப்பது போல் இருக்கிறதாம்.

***