பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




சுந்தர காண்டம்


1. கடல்தாவு படலம்

கடலைத் தாவும் அநுமனின் பேருருவையும், திருமேனியையும் தெய்வ பக்தியையும் திறம்பட வர்ணிக்கிறார் கம்பன். இப் படலத்தில் அநுமனே முக்கியமான பாத்திரமாகையால் அவனைப் பற்றியப் பாடல்கள் அதிகமாக உள்ளன. மாருதியைத் தவிர வேறு மூவரும் இப் படலத்தில் இடம் பெறுகின்றனர். மைந்நாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரே மற்றைய மூவர். இவர்களுடைய வரலாற்றையும், அருமைப் பெருமைகளையும் திறம்பட வர்ணிக்கிறார் கம்பன். கடலைத் தாண்டிய வாயுவின் மகன் மலைமீது இறங்குகிறான்.

2. ஊர் தேடு படலம்

சுந்தர காண்டத்தின் மிகப் பெரிய படலங்களுள் ஒன்று. இலங்கையை அடைந்த அஞ்சனையின் மகன் அந்நகரின் அமைப்பையும், மக்களின் இணையற்ற ஆற்றலையும், அவர்களின் செல்வ வாழ்க்கையையும் கண்டு வியக்கிறான். கம்பன் நம் கண்முன் அந் நகரை நிறுத்துகிறார். நாமும் அந்த நகர நாட்டை (சிடி—ஸ்டேட்) காண்கிறோம். ஆன்மீகத்தோடு ஒட்டாத அந் நகர மக்களின் வாழ்க்கையைக் கண்டு அனுதாபப்படுகிறோம். நகருள் புகுந்த அநுமன் மனைகளையெல்லாம் ஆராய்கிறான். கும்பகருணன், விபீடணன், இந்திரஜித்து ஆகிய மூவரையும் அநுமன் காண்கிறான்; நமக்கும் அறிமுகப்படுத்துகிறான். மண்டோதரியையும் காண்கிறான் அநுமன். உறங்கும் இராவணனையும் பார்க்கிறான். பிராட்டியார்பால் அவன் கொண்ட பக்தி அதிகரிக்கிறது.