பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

அனுப்புங்கள்” என்று இராவணனை வணங்கி விடை வேண்டுகிறான். அப்போது விபீடணன் இந்திரசித்து சொல்லியதை கண்டிக்கிறான்.

“நீ சிறுவன்; அனுபவம் முதலியன பெற்ற பெரியோர் இருக்கவேண்டிய மந்திராலோசனைச் சபையிலே உனக்கிருக்க உரிமை இல்லை. உன்னை இச் சபையில் இருக்க வைத்தது, ஆலோசிக்கும் திறனோடு கண்ணையும் இழந்த குருடன் சித்திரம் எழுதுவதைக் கைக் கொண்டு, சித்திரத்தை அமைக்கத் தொடங்குவதுபோல் உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு பொருந்தாத முறையில் மற்றவரை ஏளனஞ் செய்கிறாய்; தேவர்களை வெல்லும் அளவுக்கு உனக்கு வலிமை இருந்திருக்கலாம். அது உன் தவப்பயனே ஆகும். அந்த வலிமை நிலைத்திருக்க வேண்டுமானால் நீ அறத்திற்குப் புறம்பானச் செயலை விட்டுவிடு; தீய வினைகளை நீக்கிவிடு.”

இவ்வண்ணம் இந்திரசித்தை அதட்டிக் கூறி, இராவணனை நோக்கி நல்லுரை கூறுகிறான் விபீடணன்.

அற்பமான ஒரு குரங்கு இலங்கையை சுட்டெரித்ததே எதனால்? சானகியின் கற்பு வலிமையால் அன்றோ? எத்தனையோ பேராற்றல் உடைய அரசுகள் எதனால் அழிந்தன? கூர்த்து ஆராய்ந்தால் காரணங்கள் தெரியும். ஒன்று பெண்ணாசை. மற்றொன்று மண்ணாசை. எனவே இந்த ஆசையை ஒழி. இன்றேல் உனக்குத் தீராப் பழி ஏற்படுவதுடன் கேடும் விளையும். “மனிதராவது என்னை வெல்வதாவது?” என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம். ‘வானரத் துணைக்கொண்டு உன்னை வெல்வான் இராமன்’ என்று உணர்த்த வேண்டி இராவணனுக்கு வேதவதி அளித்த சாபத்தை குறிப்பாக உணர்த்தினான்.

இராமனின் வீரமும் வலிமையும் வாய்மையும் வழி வழியாக வந்தவை. தேவர்கள் உன்னை வெல்லமுடியாது.