பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



திவாகர நூற்பாவின் கருத்தாகும். 'பலர் கூடும் இடம்’ என்னும் பொது அடிப்படையிலேயே, மேற்கூறப்பட்டுள்ள இடங்கட்கும் கழகம் என்னும் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. திவாகரத்தில், கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாக ஐந்து இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலும் ஐந்தாவதுமே, ‘வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்’, ‘கல்விபயில் களமும் கழகம் ஆகும்' என முழு முழு அடியில் கூறப்பட்டு முக்கியம் பெற்றுள்ளன: ஏனைய மூன்றுமோ வெனில்; 'அதுவும் இதுவும் உதுவும்' என்ற 'ஏனோ தானோ'முறையில் மல்லும் சூதும் படையும் என ஒற்றை வரியில் ஒட்டிக்காட்டப் பட்டுள்ளன. ஒவ்வொன்றன் தகுதி பற்றித் திவாகர ஆசிரியரின் உள்ளத்தில் இருந்த மதிப்பீடுகள்பாட்டாக வெளி வரும் போது அதற்குரிய உருவம் பெற்றுவிட்டன. இலக்கியத் திறனாய்வுக் கலைஞர்களும் உளநூல் வல்லுநர்களும் இதனை எளிதில் உணர்வர். இதிலிருந்து நாம் உணர வேண்டியதாவது:

அறிஞர்கள் பலர் கூடும் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயரை முன்னர்ப் பெற்றிருந்தன. பின்னரே மற்போர்ப் பயிற்சிக் களமும் படைக் கலப் பயிற்சிக்களமும், சூதாடுகளமும் கழகம் என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக, சூதாடும் இடந்தான் முன்னர்க் கழகம் என அழைக்கப்பட்டது; அந்தப் பெயரே பின்னர் அறிவியல் மன்றங்கட்கும் கடன் வாங்கப்பட்டது - என்று யாரும் சொல்ல முடியாது, ஏனெனில், அன்று தொட்டே அறிஞர்கள் சூதாட்டத்தை இழித்துப் பேசி வருகின்றனர். எனவே அந்த இழிசெயல் நடக்கும் இடத்திற்குக் கழகம் என்னும் பெயர் முதலில் இருந்திருக்குமானால் அந்த இழிந்த பெயரையா அறிஞர்கள் கூடும் ஆராய்ச்சி மன்றங்களுக்குப்பின்னர் பெயராகச்