பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

51


சமையலறை அமைக்கப்பெறுகின்றது. யானையின் மதநீரால் நிலத்தை மெழுகி முத்துத்தூளால் கோலமிட்டு யானைத்தலைகளை அடுப்பாக அமைத்துக் கொள்கின்றன. யானை வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரைகளின் இரத்தம் உலை நீராகவும், அவற்றின் பற்கள் வெங்காயமாகவும், வீரர்களின் நகங்கள் உப்பாகவும் கொள்ளப் பெறுகின்றன இறந்துபட்ட வீரர்களின் அம்புகள், வேல்கள், கோல்கள். முதலியவற்றை விறகாகக் கொண்டு வீரர்களின் கோபக்கனலாகிய தீயைக் கொண்டு அடுப்பு மூட்டப் பெறுகின்றது. கலிங்க வீரர்களின் பற்களாகிய அரிசியை முரசங்களாகிய உரல்களில் சொரிந்து யானைக் கோடுகளாகிய உலக்கைகளால் நன்கு குற்றி, சல்லவட்டம் என்னும் சுளகால் புடைத்து உலையிலிட்டுக் கூழ் காய்ச்சப்பெறுகின்றது. கூழ் பானையிற் பிடித்துக் கொள்ளாதிருக்கும்பொருட்டுப் போர் வீரர்களின் கைகளாகிய துடுப்புக்களைக் கொண்டு நன்கு துழாவப் படுகின்றது. நல்ல பதம் வந்ததும் குதிரைகளின் இறைச்சியாகிய நுணியைப் பிடித்து மெதுவாக இறக்கப்படுகின்றது.

கூழுண்ணல்

பிறகு பேய்கள் கூழுண்ணத் தொடங்குகின்றன. யானைகளின் மத்தகங்களில் குருதிப் பேராற்றில் நீர் முகந்து குடிநீராக வைத்துக் கொள்ளப் பெறுகின்றது. வேழங்களின் வால்களைக்கொண்டு பெருக்கி, குருதி நீர் தெளித்து, உண்ணும் இடம் ஆயத்தம் செய்யப்பெறுகின்றது. அரசர்களின் கேட-