பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



68

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்தில் மக்கள் மகிழ்ந்திருந்ததுபோல எந்நாளும் மகிழ்ந்திருந்தனர் என்பதைச் சயங்கொண்டார்,

எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்
இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே
குலோத்துங்கச் சோழனைப் பாடீரே.[1]

என்று பேய்களின் வள்ளைப் பாட்டாகக் கூறுகிறார்.

அஞ்சல் அளித்தல்

பேரரசர் தம்மை அடைந்த சிற்றரசர்கட்கு அஞ்சல் அளிப்பர் ; அதற்கு அறிகுறியாகத் தம் அடியினைகளை அவர்கள் முடிமீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்தது.[2] இங்ஙனமே பேரரசர் யானைமீது ஏறுங்கால் தம் அடியைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகின்றது.

அமைச்சர் புகழ்

சிற்றரசர்கள் பேரரசர்களின் அமைச்சர்களைப் பெரிதும் சிறப்பாக மதித்திருந்தனர்; அவர்கள் அவ்வமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகிவந்தனர் என்பதும் தெரிகிறது. கவிஞர் இதனை,


  1. தாழிசை-533
  2. தாழிசை-337 530.