பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

75


றோம். கவிஞன் தான் அனுபவித்தவற்றை நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றான். இதை ஒரு பௌதிக அறிஞன் வருணித்திருந்தால் வேறு விதமாக வருணித்திருப்பான். அவனது வருணனைப்போக்கு அறிவியல் அடிப்படையில் தான் சென்றிருக்கும். அதனால் வெறும் செய்திகளை நாம் அறியலாமேயன்றி அனுபவத்தை உணரமுடியாது. கவிஞன் அனுபவித்தவற்றை யெல்லாம் நம்மையும் அனுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது கற்பனை. கற்பனை இல்லாதவர்கட்கு காலைக் கதிரவனின் காட்சி யாதொருவிதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞன் காணும் பொழுது தன்னை மறந்து விடுகிறான். காணும் கதிரவன், காண்பவனாகிய கவிஞன், காண்பதால் அவன் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஓர் உலகிற்குச்சென்று விடுகிறான். கதிரவனின் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றன. கதிரவனைக் காணும் நம் மனத்தில் கனவிலும் தோன்ற முடியாத கற்பனைகள் கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவைகள் அன்று, அவை அவன் மனத்தில் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கை கிளப்பிவிடும் அமுத ஊற்றுக்கள். அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்டபிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான அக்கற்பனையிலிருந்தே கவிஞன் அனுபவித்த உணர்ச்சியை நாமும் உணர்கின்றோம். பாடலிலுள்ள சொற்கள் நாம் அறிந்தவைகளாக இருப்பினும், அவை கவிதை வேலிக்குள்