பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

571

அழல் ஆட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ?—கழல்ஆடப்
பேயோடு கானில் பிறங்க அனல்ஏந்தித்
தீஆடு வாய், இதனைச் செப்பு.

'காலில் கட்டிய வீர கண்டை ஆடி ஒலிக்க, சுடுகாட்டில் பேயோடு உன் கோலம் நன்றாக விளங்கும்படி தழலை ஏந்திக் கொண்டு, தீயில் நடனம் புரியும் எம்பெருமானே, உன்னுடைய உள்ளங்கை அதில் ஏந்தியிருக்கும் தீயானது ஆடி எரிய அதனால் சிவந்ததோ? அன்றி உன்னுடைய உள்ளங்கையின் அழகிய செவ்வண்ணத்தால் அந்த அழல் சிவந்த படியோ? இந்த வினாவுக்கு உரிய விடையை நீ சொல்லியருள்வாயாக."

[அழல்—இறைவன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் அக்கினி. அங்கை — உள்ளங்கை, அழகால்—அழகிய செவ்வண்ணத்தால். சிவந்தவாறோ—சிவந்தபடியோ? 'அழல் சிவந்தவாறு அங்கை அழகாலோ?’ என்று ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டிப் பொருள் செய்வதும் பொருந்தும். கழல்—திருவடியில் அணிந்த வீரகண்டை. கான்—சுடுகாடு. பிறங்க—திருக்கோலம் விளங்கும்படி தீயில் ஆடுவாய். இதனை—இந்தக் கேள்விக்கு உரிய விடையை.]

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 98-ஆவது பாட்டு.