பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தையல், தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக் கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.

கடைக்குப்போகும் கணவன்

கடைக்குச் செல்லக் கணவன், அழகிய உடைகள் எடுத்தே உடுக்க லானான். "கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர் மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள். நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும் சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான். பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்; தைத்தாள் தையற் சடுகுடு பொறியால். ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப் பாண்டிய மன்னன் மீண்டது போல, உடுத்திய உடையும் எடுத்த மார்பும் படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்.

வெற்றிலைச் சுருள்

ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின், வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்; கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர் வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள். தூயவன் அப்போது சொன்ன தென்னெனில், "சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன; "பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள். "கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான். சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள். குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல் தளிர்க்கைக்கு முத்தம் தந்து, குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!