பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 229


அன்று வாழ்க்கையை வகைபட நடத்துவதற்குரிய முதலை இரத்தலே இரத்தலாகும். பின் அம்முதலைக் கொண்டு இயன்ற தொழில் செய்து முதலை உண்ணாது வருவாயை உண்டு மகிழ்ந்து வாழ்தலே ஏற்றமுறை. இந்த அடிப்படையில் இரப்பவராயிருப்பவர்க்கு உற்றுழி உதவுவதும் மனையறத் தார்க்குரிய மாண்புள்ள கடமை.

இங்ஙனம் பலருக்கும் துணை நின்று வாழச் செய்வது, வாழ்தலே இயல்புடைய இல்லறம் என்றார் வள்ளுவர். இன்றோ, பலருக்கு பால்வேறுபட்ட இருவர் கூடி ஒரு வீட்டில் உண்டு உடுத்தி வாழ்ந்து மக்களைப் பெருக்கி வாழ்தலே மனையறம் என்றாகிவிட்டது. அதனாலேதான் துன்பம் சூழ்ந்து வருத்துகிறது. வள்ளுவம் காணும் மனையறம் வையகத்தில் மலர்ந்தால் துன்பம் நீங்கும்; இன்பம் பொங்கும்.

மனிதன் தெய்வமாகலாம்

வாழ்க்கை மிகவும் சுவையுடைய ஒன்று. வாழ்வது என்பதும் ஒரு கலையே. மனிதன் முறையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முறையான வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதே சமய நெறியின் விழுமிய பயன்.

வாழ்க்கைக் கலையில் கைவந்தவர் திருவள்ளுவர். அவர், இந்த வையகத்து மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளமுறவே திருக்குறளைச் செய்தார்.

உலகியலில், மக்களிற் பலர் தெய்வத்தைத் தேடிச் செல்வதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில், தெய்வத் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து தங்கள் வாழ்க்கையில் அவற்றை மேற்கொள்ளாத நிலைமையையும் பார்க்கிறோம்.

இயற்கையில் மானிட யாக்கைகளுக்குள் யாதொரு வேற்றுமையுமில்லை. உயிர்களுக்குள்ளும் பொதுவில்