பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

329



நவம்பர் 8


மற்றவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியென மகிழ்ந்து வாழும்
உயர்நிலையை அருள் செய்க!


இறைவா, நீதியே! நான் உன்னை வணங்குகிறேன். திருவிழாக்கள் கொண்டாடுகின்றேன். நான் உனக்கு ஒரு பக்தன். இது என் புறவாழ்க்கை நிலை. ஆனால் இறைவா! என்னுடைய அகநிலையோ சொல்லுந் தரத்ததன்று. சம நிலையில் நிற்பது என்பது உயர்ந்த ஒழுக்கம். எனக்கும் சமநிலைக்கும் வெகுதொலைவு.


இறைவா, எனக்குத் தேவைப்படும் பொழுது யாரிடமும் அணுகுவேன். உறவு கொண்டாடுவேன். எனக்கு வேண்டாத பொழுது என்னை அணுகிவந்தாலும் நான் பார்க்க மாட்டேன். எனக்கு ஏன் இந்த மனநிலை? இப்படி ஒரு தன்முனைப்பு நிலை? இறைவா, கூடவே கூடாது. தன் முனைப்பு அறவே கூடாது.


இறைவா, ஆணவம் இல்லாமல் அடங்கிவாழும் அமர நிலையைத் தா. எந்தச் சூழ்நிலையிலும் நான் சம நிலையிலிருந்து பிறழக்கூடாது. இறைவா, அருள் செய்க!


அதிகாரப்பித்து வேண்டாம். வேண்டவே வேண்டாம். என்றும் எப்போதும் எல்லாருக்கும் நான் வேண்டியவனாகவே இருக்க அருள் செய்க! நடுவு நிலை பிறழாத நன்னெஞ்சத்தைத் தந்தருள் செய்க!


மற்றவர்கள் வாழ்வதைக் கண்டு மகிழும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! மற்றவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியென மகிழ்ந்து வாழும் மிக உயர்நிலையை அருள் செய்க!