பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/483

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

467


கேட்பதும் இழிவானது மட்டுமல்ல. அவர்களுடைய சூழலையும் பாதிக்கும்! மிச்சம் மனதுன்பமும் பகையும்தான்! எல்லா இடங்களிலுமே எல்லாருடைய வீடுகளிலுமே பொருளியல் சிக்கல் இருக்கும். நாம் மற்றவருக்குத் தொல்லைதரக் கூடாது. ஒரு சிலர் மற்றவர்களுடைய வேதனை புரியாமல் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்துவர். இது வாழும் இயல்பன்று. வருவாய் பெருகி வளரவில்லை யாயினும் செலவுத்துறை அகலாமல் இருந்தால் செல்வம் பெருகும்; வளரும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

என்பது திருக்குறள். ஆதலால் குடும்ப வரவு-செலவைத் திட்டமிட்டு இயக்க வரவுகளை வங்கியில் இட்டு வைத்து எடுத்துச் செலவு செய்! செலவி செய்யும் உணர்வுக்கு வங்கி ஒரு பாதுகாப்பு! கையிலிருந்து காசுகள் செலவாவதைவிட, வங்கியில் இயக்கும் செலவில் சிக்கனம் ஏற்படுகிறது. வங்கி, செலவைக் கண்காணிக்கும் உணர்வைத் தருகிறது. இது நமது அனுபவமும் கூட!

வரவுக்குள் செலவு செய்யத் திட்டமிடு! செலவுத் திட்டத்தில் முதற் செலவு என்ன தெரியுமா? எதிர்வரும் காலத்திற்குச் சேமித்தல் தான் முதற் செலவு நம்மில் பலர், “வாழ்க்கையை நடத்தவே வரவு போதவில்லை. எங்ஙனம் சேமிப்பது?” என்பர். இது தவறு. உழைத்து ஈட்டும் காலத்தில் சேமிக்கத் தவறிவிட்டால் உழைக்க இயலாத காலத்தில் என்ன செய்வது? தவறான பொருளியல் நடைமுறையினால் தான் குழந்தைகள் பெற்றோரையும், பின் பெற்றோர்கள் பிள்ளைகளையும் சார்ந்து வாழ்கிறார்கள். சார்ந்து வாழ்தல் சுதந்திரமற்றது. மதிப்பு இழந்தது. தன்மானத்திற்கு எதிரானது. குடும்பங்களில் இரண்டு மூன்று சேமிப்புக் கணக்குகள் தொடங்க வேண்டும். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு