பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடனே காமராஜரைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றோம். சென்னையிலுள்ள தமது அலுவலகத்திலிருந்து காமராஜர் இல்லத்துக்குப் பார்க்க வருவதாக அறிவித்தோம். செய்தி யறிந்த, காமராஜர், “அழைத்துவர அனந்தனை அனுப்பு கிறோம். அப்போது வரலாம்?” என்று சொல்லிவிட்டார், காலை பத்து மணிக்கு குமரி அனந்தன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் ஆர். ராமநாதன் செட்டியார் இரண்டு பேரையும் அனுப்பியிருந்தார்; நம்மை அழைத்துவர! உடன் காமராஜர் இல்லத்துக்குச் சென்றோம். சோபாவில் படுத் திருந்தார். எழுந்திருக்க முயன்றார். இயலவில்லை. நாம் ஓடிச் சென்று “எழுந்திருக்க வேண்டாம்" என்று சொல்லி அவரைப் பிடித்துப் படுக்க வைத்தோம். பக்கத்தில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் நாம் உட்கார... பேச்சுத் தொடங்கியது.

எங்கள் பேச்சுத் தொடங்கியவுடனேயே குமரி அனந்தனும் ஆர். ராமநாதன் செட்டியாரும் அறைக்கு வெளியே போய் விட்டார்கள். ஒரு மணி வரையில் பேச்சு நீண்டது. அப்போது அவருக்கு அரசியலில் இருந்த உணர்வுகளைத் தெளிவாகப் புலப்படுத்தினார். இந்திரா காந்தியைப் பற்றிக் காமராஜர் அப்போது கூறிய கருத்து “நல்ல பொண்ணு; ஆனால், அரவணைத்துச் செல்லும் மனம் இல்லை. அவசரகால நெருக்கடி அவசியமில்லாதது. தூத்துக்குடியில் ஒரு வீட்டில் அதிகாரிகள் புகுந்து சோதனை செய்திருக்கிறார்கள். பெண்களிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. நாம் சுதந்திரம் பெற்றது, அதிகாரிகளிடம் மக்கள் சுதந்திரத்தை ஒப்படைக்கவா?” என்று அவர் கேட்ட போது கோபம் கொப்பளிப்பது தெரிந்தது. "மக்களுக்காகச் சுதந்திரம்” என்றார். "பிழைத்து எழுந்தால் மக்களின் சுதந்திரத்துக்காக ஆதிக்க அரசை எதிர்த்துப் போராடுவேன்!” என்றார். நமக்கு நல்லகாலம் இல்லை. காமராஜர், அமரராகி விட்டார். இந்த மண்ணில் பிறந்தவர்களில் காமராஜர் ஒரு மகத்தான மனிதர்.