பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

119


உடையது. ஒன்று-நாடாளுமன்றம் சட்டமன்றங்கள், அமைச்சரவைகள், இரண்டாவது-அரசு அதிகாரிகளைக் கொண்ட ஆட்சி அலுவலகங்கள், மூன்றாவது-நீதிமன்றங்கள். அதிகாரவர்க்கம் படிப்படியாகச் செயலிழந்து வருவதை யார்தான் அறியாமல் இல்லை.

உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றப்பட்டார். அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். நம்மீது வழக்குத் தொடரும் நிலைக்குரிய அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டனர். வழக்குத் தொடர்வது என்று மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. நம்மைக் கைது செய்யவும் ஆணை பிறப்பித்தாயிற்று மறுநாள் காலை நம்மைக் கைதுசெய்யத் திட்டம்! இரவோடு இரவாகச் செய்தி நமக்குக் கிடைத்து விட்டது! செய்தி கிடைத்த நேரம் இரவு பத்து மணி கைது செய்யும் விவரம் ரகசியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு எட்டு மணிக்கு அதிகாரிகளுக்கு உத்தரவு தரப்பெறுகிறது. அப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்தில் நமக்குச் செய்தி கிடைத்துவிட்டது! உடனே நாமும், நம்மிடம் நெருங்கிய நட்புரிமைகொண்டு பழகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினராகிய மேலமாகாணம் எஸ். நாராயணன், விடுதலைப் போராட்ட வீரர் தேவகோட்டை கே.எம். சுப்பையா ஆகியோரும் ஆதீன வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பனும் தேவகோட்டை சருகணிச்சாலை ஓரத்தில் ஆலோசனை செய்தோம். ஆலோசனையின் முடிவு "மறுநாள் காலையில் நாம் திருப்புத்தூர் குற்றயியல் முறை மன்றத் துக்குச் சென்று ஆஜராகி விடுவது. உடனே பிணையில் அழைத்துவர வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். மெய்யப்பன் ஆஜராகவேண்டியது” என்பது.

அன்றிரவு நாம் வட்டாணம் பயணமாளிகையில் தங்கி மறுநாள் காலை திருப்புத்துார் குற்றயியல் முறை மன்றத்தில் ஆஜராகினோம்! வி.ஆர்.எஸ். மெய்யப்பன் பிணையில் எடுத்தார்! இந்தச் செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது.