பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

183



நாம் தங்கியிருப்பது சென்னியப்ப முதலியார் வள மனையின் மாடி! பெரியாரால் மாடி ஏறக் கூடுதல் முயற்சி தேவை இருக்குமா என்பது நமக்கு ஏற்பட்ட ஐயம். "கீழேயே ஒரு அறை பார்க்கலாம்!” இது நமது கருத்து. அவ்வாறே ஏற்பாடு செய்ய நினைப்பு. ஆனால், பெரியார் இதற்கு இசையவில்லை. "பரவாயில்லை! மாடியில் மகாசந்நிதானம் இருக்கும் இடத்திலேயே சென்று பார்ப்பது தான் முறை!” என்றாராம்.

மாடியில் ஒர் அறையில் இரண்டு நாற்காலிகள்! இருவர் உட்காரக்கூடிய நாற்காலி ஒன்று! இருவர் உட்காரும் நாற்காலியில் நாம் ஒரு முனையில் அமர்ந்திருந்தோம். பெரியார் வந்துவிட்டார். அறைக்குள் அவர் நுழையும்போது நாம் எழுந்து அவரை வரவேற்றோம். பெரியார் வணக்கம் செய்யக் கையிரண்டையும் அவசரத்தில் சேர்க்கும்போது, அவரது கைத்தடி கீழே விழுந்தது: "அமருங்க! அமருங்க!” என்று சொல்லிக்கொண்டே வருகிறார். நாம் உட்கார்ந்திருந்த இருவர் உட்காரக்கூடிய நாற்காலியின் மற்றொரு பகுதியில் உட்காரும்படி கேட்டுக் கொள்கிறோம்! பெரியார் மறுக்கிறார்! "மகாசந்நிதானத்துடன் ஒரு இருக்கையில் அமருவது முறையன்று” என்று கூறிக்கொண்டே, அருகில் இருந்த வேறு நாற்காலியில் உட்காருகிறார்!

உடன் வந்தவர்கள் - இருந்தவர்கள். அனைவரும் போய்விட்டனர்; கதவுகள் சாத்தப்பட்டன். நாமும் பெரியாரும் மட்டும்தான் அறைக்குள் இருக்கின்றோம். முதலில் சில நிமிடங்கள் பரஸ்பர நலன் விசாரித்தல், மற்ற பொதுத் தகவல்கள் பேசப்பெற்றன. சிறிது நேரத்தில் பெரியாருக்கும் நமக்கும் இடையேயான பேச்சு ஆஸ்திக நாஸ்தீக பக்கம் திரும்பியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேச்சு தொடர்ந்தது. நமது சமயம் அவ்வப்போது கால, தேச வர்த்தமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு புதுமைப்படுத்திக் கொள்ளத் தவறியதன் விளைவே பெரியார்! நமது சமயத்தில்