பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

207


வர்களாக விளங்கும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள், தவத்திரு சுந்தர சுவாமிகள் இருவரிடமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கப்பெற்றது.

அடிகள் பெருமக்கள் இருவரும் மேல்சபைக்குப் போகலாம் என்றார்கள். அதன்பின் வளர்ப்புத் தந்தையாகிய தருமபுரம் மகாசந்நிதானம் கயிலைக் குருமனியின் கருத்தறிய முயற்சி. அவர்களும் மேல்சபைக்குப் போகலாம் என்று இசைவு தந்தார்கள். இதற்குப் பிறகுதான் கலைஞருக்கு இசைவு தரப்பெற்றது. தமிழ்நாட்டு மடங்கள் வரலாற்றில் இது ஒரு திருப்புமையம் ! கலைஞர் நமது சமுதாயச் சிந்தனைக்குத் தந்த ஆக்கம் இது.

கலைஞரிடம் நமக்கு நல்ல பழக்கம் உண்டு! திருமடத் துக்கு வந்திருக்கிறார். 1967 தேர்தலில் நாம் காங்கிரஸ் பக்கம்! நாம் மயிலாடுதுறை நகராட்சிப் பயண மாளிகையில் தங்கி யிருந்தபோது கலைஞரும் அங்கே தங்கியிருந்தார். அன்று மாலை இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது நமது சமய அமைப்பு செய்யவேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி அவர் கொண்டிருந்த உணர்வுகளைப் புலப்படுத்தினார். பயனுள்ள கலந்துரை யாடல். இந்தக் காலக்கட்டத்தில் தான் பல நல்ல நண்பர்கள் கிடைத்தனர். இன்றைய சட்ட அமைச்சராக இருக்கும் கே.ஏ. கிருஷ்ணசாமியும் அறிமுகமானார்.

மேல்சபை உறுப்பினராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி 1969 ஆகஸ்டில் நடந்தது. முதல்வர் கலைஞர், மற்ற அமைச்சர்கள் உடனிருந்து நடத்தி வைத்தனர். நாம் உறுதிமொழியைக் கடவுள் பெயரால் எடுக்காமல் மனச் சாட்சியின் பெயரால் எடுத்துக்கொண்டோம். இது பலருடைய கவனத்தை ஈர்த்த செய்தியாயிற்று. பல செய்தித்தாள்கள் கட்டம் கட்டிச் செய்தியாக்கின. இதனால் விளைவுகளும் தோன்றின. எதிர்விளைவுகளும் தோன்றின.