பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

233


அடிச்சுவட்டில் தொடங்கியிருக்கும் தொண்டுப் பயணம் தொடர வேண்டும். நாடு தழுவிய நிலையில் தொண்டு வளர வேண்டும். நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களிலாவது நடக்க வேண்டும். புராணங்களைப் போதிப்பதன் மூலம் அல்லாமல், தொண்டின் வாயிலாக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பயணம் இடையீடின்றி நடக்க வேண்டும். மங்கையக்கரசியார் பிறந்த மண் செழிக்க சு. கல்யாண சுந்தரம், பேராசிரியர் சாமி. தியாகராசன் ஆகியோர் உதவி மேலும் மேலும் தேவை. மங்கையக்கரசியாரின் சமயப் பணிக்கு உதவியாக இருந்த குலச்சிறை நாயனார் பிறந்த ஊர் மணமேல்குடி, இந்த ஊரில் குலச்சிறையார் வழிபட்ட திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு, நாட்பூஜை அறக்கட்டளையும் நிறைவெய்தியிருக்கிறது. இதற்குத் துணையாக அமைந்தவர்கள் ஏ. ஆர். பக்கிரிசாமி, கே. தியாகராசன் முதலியோர். குலச்சிறையார் நினைவாகக் கல்விப் பணி தொடங்கவும் இருக்கிறது. திருநாளைப் போவார் பிறந்த குலமும் ஊரும் செழிக்க இராம. சிதம்பரம், ராஜாங்கம் ஆகியோர் ஒத்துழைப்பு மேலும் மேலும் தேவை. தண்டியடிகள் நினைவாகக் கமலாலயம் துய்மை செய்யப் பெறுகிறது. பல அன்பர்கள் இந்தப் பணிக்கு வந்துள்ளனர். இனிதே நிறைவெய்தும்.

இந்தப் பயணம் இரண்டாவது சுற்று. ஆதலால், பயணம் விரைவாக நடத்த வேண்டும். பயணம் முடியும் வரையில் வரலாறு நிற்காது எழுதுவது நிற்கிறது. பணி தொடரும்.