பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வளர்ப்பு நாய் அருமையாகக் குரைக்கும். காரணத்தோடு குரைக்கும்-கள்வரைக் காட்டிக் கொடுக்கும். ஆனால் ஊர் நாயோ எப்பொழுதும் குரைக்கும். அச்சத்தாற் குரைத்துக் கொண்டே இருக்கும். அது போல் திருவருட் சிந்தனையில்லாதவர்கள்-உறவில்லாதவர்கள் நிறையப் பேசுவர்-பயனற்ற சொற்களையே பேசுவர். பகைகாட்டும் சொற்களையே பேசுவர்-அச்சத்தினால் பேசித் திரிகுவர். ஆனால் ஒரு பயனும் காணார்.

நாய் இயல்பாக அறிவில்லாதது. அறிவிடைச் செயல்கள் செய்யும் ஆற்றல் இயல்பில் இல்லை. ஆனாலும் அது ஒரு வளர்ப்பு நாயாக இருந்தால் - வளர்ப்பவர்கள் முறையாக வளர்த்தால் சொன்னதைக் கேட்கும், செய்யும்! அறிவோடு தொடர்புடைய காரியங்களை கூடச் செய்யும். இயல்பாக இல்லாத ஒன்றை வளர்ப்பின் மூலம் பெற்றுவிடுகிறது. ஊர் நாய் இந்த வாய்ப்பை இழந்து வருகிறது. அதுபோலவே மனிதனும் தக்கவர்களைச் சார்ந்து வளர்வதன் மூலம் தன்னிடத்தில் இயல்பில் இல்லாத அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளைப் பெற்றுச் சிறக்க முடியும். தக்கோரைச் சார்ந்து வாழாதவன் அத்தகு அறிவு ஆற்றல் பண்புகளைப் பெறமாட்டான்.

வளர்ப்பு நாய்க்குத் தன்னுடைய வளர்ப்புத் தலைவனுக்கு நன்றி காட்ட வேண்டும்-அவனையும் அவனுடைய உடைமையையும் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வு இருக்கும். ஊர் நாய்க்கோ ஒருவர் ஏது? அதுதான் வீதி முழுதும் சுற்றுமே, ஆதலால் கடமையுணர்வு அரும்பித் தோன்ற வழியில்லை. அதுபோல, கடவுள் நினைவும், உறுதியான மனித இயல்பும் உடையோர் ஒரு தலைவனை-நண்பனை நாடி வாழ்வர். அவனுக்குரிய கடமைகளைச் செய்வர். அங்ஙனம் அல்லாதவர்கள் ஒரு எச்சில் இலையை முடித்து, அடுத்த எச்சில் இலைக்கும் ஓடும் ஊர் நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றுவார்கள். ஆதலால்