பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ந்தமையால் பயனடையதாக அமைந்தது! அனுபவ முதிர்ச்சியினின்று பாடுவதால் கருத்துக்களை இனிதாக -எளிதாக விளக்குகிற உவமைகள் திருவாசகத்தில் மலிந்து காணப்பெறுகின்றன.

வழிபடும் தெய்வத்திற்கு இறைவன் என்ற அருமையான பொருள் பொதிந்த தத்துவப் பெயரை அனுபூதிமான்கள் சூட்டினார்கள். தென்னாடுடைய சிவனே என்று அகங்குளிர வாழ்த்தும் மணிவாசகர், "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று ஏற்றிப் போற்றுகிறார். எந்நாட்டவர்க்கும் என்னும் சொல், நாடு, மொழி, இனம், சமய வேறுபாடுகளைக் கடந்த பொருளைக் காட்ட எடுத்தாண்ட வலிவுபெற்ற ஒரு சொல். இறைவன் எங்கணும் தங்கியிருக் கிறான். எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருக்கின்றான். எப்போதும் இருக்கிறான். இந்த அருமையான இறைவன் கலந்துறையும் காட்சியைக் காண்பவர் சிலரே. காணப் பெறாதவர் பலர். ஏன்? பலர் காணமுயற்சிப்பது கூட இல்லை. அங்ங்ணம் காண முயற்சிக்காதவர்களில் சமய நெறியைச் சார்ந்தோரும் உண்டு-சாராதவர்களும் உண்டு. சமயநெறியைச் சார்ந்தோரினும் பலர் இந்த உண்மையை மறந்துவிட்டு வெறும் ஆரவாரத் தன்மையுடைய-சமயம் போல் தோற்றமளிக்கக் கூடிய சடங்கு நிகழ்ச்சிகளிலேயே ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீங்கா துறைகின்றான் எனக்கருதி அன்பு காட்டும் இயல்பை மறந்து விடுகின்றனர்-மாறாக தீமையும் புரிந்தொழுகுகின்றனர். கள்ளுள்ள மலர்களி லெல்லாம் நிச்சயமாக வண்டுகள் வந்து தங்கும். அதுபோல அன்புடைய மனிதர்களிடத்திலெல்லாம் இறைவன் வந்து தங்குவான் என்ற குறிப்பையுணர்த்த "கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்” என்று குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர். மது நிறைந்த மலரும் வண்டும் பிரிக்கப்படாதன. அது போல அன்பு சார்ந்த மனிதனும்