பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்தத் தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனை சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்? அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் பின்பற்றுகிறோமா? அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா? அவர்களுடைய சிந்தனைகளுக்குச் செயல்களுக்கு நாம் வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நண்பர்களுக்கிடையில், கணவன் மனைவிக்கிடையில், குடும்பச் சூழ்நிலையில், கடைவீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளுமன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளர வேண்டும். சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்க வேண்டும். ஜனநாயக வடிவம் போதாது. ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.

ஒரு சாதாரண பாத்திரம் கூனி. அவளை அலட்சியப் படுத்தியதால் இராம காதையின் திசையே மாறிவிட்டது. சிறுவர்களை, சின்னஞ்சிறு மனிதர்களை அலட்சியப்படுத்துகிற மனப்போக்கு கூடாது. எல்லோருக்கும் மதிப்புத் தர வேண்டும். பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். அரசியல் என்பது ஒரு ஞானம். அது ஒர் அறிவியல், அரசியல் அறிவு மக்களாட்சி முறையில் வாழுகின்ற நாட்டு மக்களுக்குத் தவிர்க்க முடியாது. அரசியல் அறிவு, அரசியல் போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கே சொந்தமானவை