பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்பாக உள்ள அறியாமையைத் தோண்டி எறிந்து விட்டு, அறிவூற்றைக் கண்டு, அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதே கல்வியாகும். இதுவே கல்வியின் நோக்கம் - பயன். கல்வித் துறை மக்கள் தொகுதிக்குரியதான பிறகு, இது நடைபெறவில்லை. ஆயினும், தக்க நாட்டுப்பற்றுள்ள சமூகச் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மனமிருந்தால், இன்னும் செய்ய இயலும்; செய்யவேண்டும்.

கல்வியின் தகுதி, கற்பிக்கும் ஆசிரியரையே மிகுதியும் சார்ந்திருக்கிறது. கற்பிக்கும் ஆசிரியரிடம் சிறந்த திறன் இல்லையானால் பள்ளியால் விளையும் நன்மையைவிட விபத்துக்களும் குழப்பங்களும்தான் ஏற்படும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது, மாணவர் பகுதியுடன் ஒன்றியிருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது? கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் தனக்கும் அந்நிலையில் உள்ள ஒன்றுதலில் உள்ள அமைவு அல்லது இடைவெளியைத் தெரிந்துகொண்டு கற்பிக்கும் ஆசிரியர்தான், கற்பிப்பதில் வெற்றி பெற இயலும்.

பாடம் என்பது கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய முயற்சி என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ள வேண்டும். கற்பிக்கும் தனது ஆசிரியத் தன்மையுடன், கற்கும் மாணவரையும் ஒன்றச் செய்வதன் மூலம் - கற்கும், கேட்கும், சிந்திக்கும் திறனைத் தூண்டித் தம்பால் ஈர்த்து, வினா - விடை மூலம் - மாணவன் கற்றுக் கொள்கிறான்; தெளிவாக இருக்கிறான் என்பதை ஆசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு செடி வளர்வதற்குப் பலவகை உணவுப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படும். அதுபோல், மனிதனும் வாழ்க்கையில் வளர, பண்பாட்டில் வளர கல்வி தேவை. கற்கவேண்டிய துறைகள், நூல்கள் மனிதர்களுக்