பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

315


இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி, உணரும்மொழி, ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.

இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசியமொழியைக் கற்றபாடில்லை. ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்த திசையில் செல்வது விரும்பத் தக்கதல்ல - தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை. உலகத்தின் சாளரத்தை மூடவும் வேண்டாம். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்கலாம்.

தாய்மொழியை மதித்துப் போற்றும் கல்வி உலகமே நமக்குத் தேவை. தாய்மொழி வழி உள்ளத்தை உயர்வு செய்யும் கல்வி கற்போம்; அறிவை வளப்படுத்தும் கல்வி கற்போம். உலகக் கல்வியும் கற்று உலகமாந்தருடன் கைகோர்த்து நிற்போம்! சுய அறிவை வளர்ப்போம். அதற்குத் துணையாகக் கற்கும் கல்வியை ஆக்குவோம்!

பெரிய, பெரிய இலட்சியங்களை - இமயத்திலும் உயர்ந்த இலட்சியங்களைக் கொள்வோம்! அவற்றை அடைய உழைப்போம்! இதுவே இன்றைய கல்வி உலகு நம்மை அழைத்துச் செல்ல வேண்டிய இடம்.

நாளைய இந்தியா இன்றைய பள்ளியிலேயே தொடங்குகிறது என்பதை நமது அரசுகளும் சமூகமும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எதிர்கால இந்தியா - ஏற்றமடைவது இன்றைய பள்ளியின் நடைமுறையையும், நமது குழந்தைகளுக்குத் தரப்பெறும் கல்வியையுமே பொறுத் திருக்கிறது.

நாம் இன்று சாதி, மத, இன எல்லைகளிலும், பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கைகளிலும் சிக்கிச் சீரழியும்