பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பழங்காலத்தில் உற்பத்தியுடன் கூடிய நாகரிகத் தொடக்கம் உழைப்பினாலேயே தொடங்கப் பெற்றது. காதல் வாழ்க்கையும் அப்படித்தான் ! சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிடப் பெருமுயற்சி, கடின உழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால்கூடப் போதும்! உழைப்புடன் கூடிய வாழ்க்கை, சொர்க்கத்தின் கதவைக்கூடத் தட்ட உதவும்.

ஒவ்வொருவரும் எந்தவிதமான தூண்டுதலுமின்றி இயல்பாகவே உழைக்கும் உணர்வு பெறவேண்டும். என்று மனிதகுலத்துக்கு உழைப்பு ஜீவ சுபாவமாக அமைகிறதோ, அன்றே "சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற ஊதியம்" என்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும், முடியும்.

உழைப்பின் சின்னமாகிய காய்த்துப்போன கைகளும் கால்களும் பெறவேண்டும். அதுவே, உழைத்தலைக் காட்டும் சின்னம்: ஒருநாள் நபிகள் நாயகம், தம்மைக் காண வந்தவர்களுடன் கட்டித் தழுவியும், கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றியும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்படி வந்தவர்களுள் ஒருவரின் கையைப் பற்றிய அண்ணலார் நபிகள் நாயகம் நீண்ட நேரம் திரும்பத் திரும்ப அவர் கையைக் கண்களில் ஒற்றிக் கொண்டதோடன்றி, கண்களில் நீர்மல்க நின்றுகொண்டிருந்தார். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, “இவருடைய கைகளில் உழைத்துக் காய்த்துப் போன சுவடுகள் இருந்தன. அவை எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன” என்று நபிகள் நாயகம் அருளிச் செய்ததாக அவர் வரலாறு கூறுகிறது.

மனிதன் இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மட்டுமே திளைத்து வாழ்தல் கூடாது. இன்ப நுகர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக்