பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

419


அங்காடிப் பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இது தவறு. உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இயற்கைப் பொருளாதாரத்திற்கு - அதுவும் குறிப்பாக வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு நீர்வளம் தேவை. "நீரின்றமையாது உலகம்” என்றது திருக்குறள். தண்ணீருக்கு மூலம் மழை. மழைநீரைச் சேகரித்தல் வேண்டும். கழனிக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்ப்பது வாய்க்கால், "நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றம்” என்று மாங்குடிமருதனார் பாடியமை அறிக.

நீர்வளம் சேர்ப்பவை வரத்துக்கால்கள். மழைதரும் தண்ணீர் வளத்தைச் சேமித்துக் காக்கும் பழக்கம் தேவை. தண்ணீரைச் செல்வம் என்றே அப்பரடிகள் கூறுகின்றார். "ஏரிநிறைந்தனைய செல்வன்” என்பது அப்பரடிகள் வாக்கு.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியபொழுது "உடலுக்கு உணவு, உணவு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நிலத்தொடு கூடிய நீர் நிலத்தையும் நீரையும் கூட்டிப் பயன் காண்பவர்கள் இவ்வுலகில் உடம்பையும் உயிரையும் ஒரு சேரப்படைத்தவராவர். ஒரு நாட்டில் நிலப்பரப்பளவு எவ்வளவு மிகுதியாய் இருப்பினும் நீர்வளம் இல்லையேல் அந்நிலம் பயன்படாது. ஆதலால், நிலம் பள்ளமாய் இருக்கும் இடத்தில் கரையைக் கட்டித் தண்ணிரைத் தேக்கு!" என்று அறிவுறுத்துகிறார்.

இங்ஙனம் நீரைத் தேக்குவதைத்தான் இன்று கசிவுநீர்க் குட்டை என்று கூறுகின்றோம். இங்ங்ணம் தண்ணீரைத் தேக்கிப் பயன்கொள்பவர்கள் இந்த உலகத்தின் செல்வத்துடன் இணைக்கப் பெறுவர். தண்ணீருக்குக் கரைபோட்டுத் தளையமைக்காதார் இவ்வுலகத்தில் வாழ்ந்தும் வாழாதாரே!

இனிய அன்புடையீர்! மழைவளம் வர, வரக் குறைந்து வருகிறது! மழை, தேவை! மழைவளம் சிறக்கக் காடுகளை