பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/441

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

429


உலாவருதலைப் போல், உயிர் உடலை மாற்றிக் கொண்டே வந்து, மானுடப் பிறப்பை எய்தியது. அதனால்தான் சாதலையும், பிறத்தலையும், திருவள்ளுவர்

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்றார்.

ஆன்மிகம் என்பது முற்றிலும் ஆன்மாவைச் சார்ந்தது. அதாவது, ஆன்மாவின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாழ்க்கை முறை. இந்த உடல், உடலின் பொறிகள் வழி குணங்கள் இல்லை. குணங்களும், திறன்களும், பண்புகளும், ஆன்மாவைச் சார்ந்தவையே என்பது வெளிப்படை.

எல்லோருக்கும் உறுப்புக்கள் ஒத்து உள்ளன. ஆனால் பண்புகள் ஒத்து இல்லை. இதற்கு ஆன்மாக்களிடையே உள்ள தராதரமே காரணம். அறிவு, ஆன்மாவைச் சார்ந்தது. ஆன்மாவை அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளுதலே வாழ்க்கையின் முதற்படி.

காணாதனவற்றைக் காண, கண்ணிற்கு ஒளியாக, அறிவொளியாக இருந்து துணை செய்வது ஆன்மா. கேளாதனவற்றைக் கேட்க, காதுகளுக்குப் புலனாக அமைந்து துணை செய்வது ஆன்மா. ஆன்மா உருவமற்றது. ஆன்மாக்கள் எண்ணிக்கையில் பல. அதன் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்டது உடல்.

ஆன்மாவை, ஆன்மாவின் வளர்ச்சியை, மறந்துவிட்டு உடலால் மட்டும் வாழும் மனித மிருகங்களும் உண்டு. இவர்களே துஷ்டர்கள்; கொலைக்காரர்கள்; சமூகத்திற்குரியன செய்யாதவர்கள். ஆதலால்தான் சான்றோர் ஆன்மாவில் வாழ்தலை, ஆன்மாவைச் சார்ந்து வாழ்தலை வாழ்நிலை என்றனர்.