பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/561

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

549


இன்றில்லை; என்றாலும் அந்த உலாவின் நோக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருட்டிரு தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் என்ற பெயருடன் பட்டம் பெற்ற போதிலும் 'அடிகளார்' என்றே அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டு வந்தார். 'அடிகளார்' என்று சொன்னாலே அது குன்றக்குடி அடிகளாரைத்தான் குறிக்கும் என்னும் நிலை மலர்ந்தது.

பொருளாதாரத்தில் 'மார்க்சியமும்', சமுதாயச் சீர் திருத்தத்தில் 'பெரியாரியமும்', மனித நேயத்தில் 'காந்தியமும்' என இம்மூன்றும் ஒன்றாகி இணைந்த தனி இயமாக 'அடிகளாரியம்' இருந்து வந்தது.

அடிகளார் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அவருடைய சிந்தனைகள் இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பொதுவாக, துறவியர், துறவு பெற்றதற்கு முன் நிகழ்ந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதில்லை; நம் அடிகளாரோ தம் இளம் வயது நிகழ்ச்சிகள் எதிர்காலச் சந்ததியினர்க்குப் பாடமாகக் கூடியவை என்ற உணர்வோடு ஒரு சிலவற்றைக் கூறியுள்ளார்.

வர்க்க உணர்ச்சியை எதிர்க்க வேண்டுமென்பது அவருடைய குருதியிலேயே கலந்து நின்ற ஓர் உணர்ச்சியாகத் திகழ்கிறது. ஊரில் இருந்த ஓர் மன்றத்தில் செய்தித் தாட்களை அனைவரும் படிக்க வாய்ப்பில்லை என்ற நிலை நேர்ந்தபோது அடிகளார் உடனடியாகச் சில இளைஞர்களை ஒன்று திரட்டி 'வினோபாபாவே வாசகசாலை' என்ற ஒன்றைத் தொடங்கி அதனைப் பொது இலவச வாசகசாலை யாகச் செய்திருக்கிறார்.

பொதுத் தொண்டிலேயேயும் அவருக்கு இளம் பருவத்திலேயே நாட்டம் இருத்திருக்கிறது. ஊர்க் குளத்தருகே