பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

117


துன்பங்களினால் நிலை கலங்கார். அவர்கள் இன்பம் விழைதல் இல்லை! துன்பம் இயற்கை என்று எண்ணுவர். இத்தகு வாழ்வியலையே இருவினை ஒத்தல் என்று சமயவியல் கூறும்.

துன்பங்களுக்காகத் துக்கப்படுதல் விலங்கியல்பு ஆகும். துன்பம் நல்லுணர்வு கொளுத்துவதற்காகவே கிடைத்த சாதனம் என்று சான்றோர் கருதுவர். நல்லதாக நடந்த ஒரு காரியத்திற்குப் பலர் தம்மைக் காரணமாக்கி மகிழ்வர்; பெருமைப்படுவர். அதே போழ்து ஒன்று தீமையாகிவிட்டால்- துன்பமாகிவிட்டால் பழியைப் பலர் மீது தூக்கிப் போடுவர்; விதியை நொந்து கொள்வர். ஏன் இந்த இரட்டை நிலை? நன்மையும் தீமையும் ஏன் ஆன்மாவைப் பாதிக்க வேண்டும்? பானை சுடலாம்! பாலை நேரே சுட வைக்க இயலுமா?

நன்மையையும் தீமையையும் அனுபவிக்கும்பொழுது சமநிலையாகப் பாவித்தல், விருப்பு - வெறுப்புக்கள், காய்தல்- உவத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுதல்-இருவினை ஒத்தலாகும்.

மாணிக்கவாசகர் முதலமைச்சராக இருந்தபொழுதும் அரச தண்டனைக்கு ஆளாகிய நிலையிலும் சம நிலையில் இருந்தார். அதனாலேயே “நன்றே செய்வாய், பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!” என்றார். மாணிக்கவாசகர் அவர்தம் வாழ்நிலையில் அடைந்த துன்பங்கள் பலப்பல! ஆனால் ஒருபோதும் மாணிக்கவாசகர் அஞ்சியது இல்லை. அதனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் கணக்கில் காட்சிகளைக் காட்டியருளியுள்ளான். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஞானாசிரியன்; மதுரையில் குதிரைச் சேவகன், வைகையாற்றங்கரையில் கொற்றாள்! இங்ஙனம் எத்தனை எத்தனை காட்சிகள்! எனவே, “கணக்கிலாத் திருக்கோலம் காட்டினாய்!” என்றார் மாணிக்கவாசகர்.