பக்கம்:குறட்செல்வம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்செல்வம்🞸105

பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், கொடுத்து மகிழ்தல், ஆகியன. செய்யாமல் பூட்டி வைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லுக்கு நிறைந்த பொருள் உண்டு. போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துக்களும் அடங்கும்.

“பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள” என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற் குணம். பொருளின் மதிப்பினை— சிறப்பினை உள்ளவாறு உணர்தல்.

பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதே அன்றிக் குறையும் இயல்புடையது அன்று. பொருட் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீருற்றிச் சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பே யாகும். உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும்.

அதனாலன்றோ, அப்பரடிகள், “ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றார். ஏரிக்குக் கரைக்கட்டித் தண்ணீரைக் காப்பதுபோல, பொருளுக்கு சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கனம் என்றால் கஞ்சத்தனம் என்று பொருளல்ல— அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது.

ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவது இல்லை.

கு-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/107&oldid=1562426" இலிருந்து மீள்விக்கப்பட்டது