பக்கம்:குறட்செல்வம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33. எது தவம்?


திருக்குறள் ஓர் ஒழுக்க நூல்—அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி உணரத்தக்கது.

வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட—நடைமுறை சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. “வாழ்வாங்கு வாழ்தல்” என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று முடிவில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது.

எல்லா உயிர்களும் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/110&oldid=1562428" இலிருந்து மீள்விக்கப்பட்டது