பக்கம்:குறட்செல்வம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இனி, பிறருக்குத் தீமை செய்ய நினைக்கின்ற அளவிலேயே நினைக்கின்றவன் தீமையுறுகின்றான் என்பது சான்றோரின் அனுபவ உரை. “தீங்கு நினைக்கின்றவனுக்கே தீங்கு”. ‘Evil to him who evil thinks’. என்பது ஆங்கிலப் பழமொழி. தனக்குத் தீங்கு நேராமல் இன்னொருவனுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று ஒர் அனுபவ உரையுண்டு.

திருவள்ளுவர், தீமையையும் தீயையும் ஒப்புநோக்கி தீச் செயலின் இழிநிலையை - அதன் கொடுமையை நமக்கு உணர்த்துகின்றார். தீ, வைத்த இடத்தில் மட்டுமே எரியும். தீ, வைக்கின்றவனின் கை, பற்றி எரிவதில்லை. தீ, வைக்கப்பெற்ற கூரை மட்டுமே பற்றி எரியும். இது ஒருபால் கேடு.

அது மட்டுமின்றி தீயினை யார் வைத்தாலும் வைத்தவர்களே அணைக்க வேண்டுமென்ற அவசியமில்லாமல் மற்றவரும் அணைக்கலாம். ஏன்? இன்று தீயனைக்கும் படையே இருக்கிறது. ஆனால் ஒருவரிடம் உள்ள தீமையைப் பிறிதொருவர் தணிக்க முடிவதில்லை. ஆனால், முயலலாம். அந்த முயற்சி தூண்டுதலும் வழி நடத்தலும் என்ற அளவிலேயே அமையும். தீமையுடையவர் உணர்வசைந்து உடன்பட்டாலேயே மாறுதல் உண்டு. அப்படியில்லையேல், ஒருவரிடமுள்ள தீமை தணிவதில்லை.

இந்தத் சிறந்த நோக்கந்தான் தன்னிடமுள்ள தீமையை, தானே உணர்ந்து நொந்து, வருந்தி அழுது வாடி, தீமையிலிருந்து விடுதலைபெற, சான்றோர்கள் முயன்றிருக்கிறார்கள். இந்த, சிறந்த நோக்கத்துடனேயே சமயங்களில் பிரார்த்தனையும், வழிபாட்டு முறைகளும் தோன்றின. உண்மையான பிரார்த்தனை என்பது ஒருயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/84&oldid=1562412" இலிருந்து மீள்விக்கப்பட்டது