பக்கம்:குறட்செல்வம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்ச்சியில்லை. உதவும் பணியில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு, சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள்.

பிணத்தை நடுவீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும். காற்றைக் கெடுக்கும். சமுதாயத்திற்கு நோய் தரும். அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழமுடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம்போல் நாறுவான்.

நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். உபத்திரவம் செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வது போல், சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.

ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார். இதையே (volunteer Service) என்று குறிப்பிடுகிறார்கள். குறட்பாவைப் பாருங்கள்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/90&oldid=1554742" இலிருந்து மீள்விக்கப்பட்டது