பக்கம்:குறட்செல்வம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

சான்றோர்க்குத் துன்பம் தரும். இரந்து கேட்பவர்களுடைய மனம் நிறைவுபெறும் வண்ணம் ஈவதுதான் ஈதலுக்குச் சிறப்பு. அங்ஙனம் இன்றி, ஏதோ பெயரளவில் கொடுப்பதும் இரந்தவர்களுடைய வறுமை நோய்க்கு மருந்தாகாவண்ணம் வழங்குதலும் சால்பல்ல.

இரந்தார் பேராசைக்காரராக இருந்தால் இரக்கப் படுதலும் தீது. அதுமட்டுமின்றி தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் பனைத்துணையாகக் கொண்டு மனநிறைவு அமையத்தக்க பண்பாடு இல்லாத்வர்களாக இருப்பின் ஈதலில் மகிழ்ச்சி ஏது?

அதனாலன்றோ, உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்ததல்ல—உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது என்று திருக்குறள் கூறுகிறது.

சான்றோர், நன் மனமுடிையோர் ஒருவேளை உப்பில்லாக் கூழே குடித்திருந்தாலும் அதை என்றைக்கும் எண்ணிப் பார்ப்பர். அக் கூழ் இட்டவர்க்கு நல்லது எண்ணுவர். நல்லது செய்வர். அற்பமனத்தர் கீழ்மக்கள் எவ்வளவு பெற்றாலும் பெற்றதைச் சுருக்கி, பெறாததையே பெரிதுபடுத்திக் காட்டுவர். பெற்ற உதவிக்கு நன்றி செலுத்தும் இயல்பின்றி, பெறாது போனவைகளுக்குப் பகை காட்டுவர்.

ஆதலால், ஈதல் இழப்பே எனினும் வறியோர்க்கு ஈதல் வேண்டும். வறியோரினும் இன்றியமையாத் தேவை கிடைத்தவுடன் மனநிறைவு கொண்டு மகிழ்ந்து வாழத் தெரிந்தவர்களே இரப்பவர்களாக வந்தால் ஈதல் இனிது இனிது! மீண்டும் மீண்டும் பெறவேண்டும் என்ற பெரு வேட்கை யுடையவர்களாக இரக்கப்படுதல் தீதே யாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/94&oldid=1554748" இலிருந்து மீள்விக்கப்பட்டது